தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் இருக்கின்றனர். அவற்றை விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் ஒருங்கிணைத்து மக்கள் நல பணிகளை செய்து வருமாறு ஊக்கப்படுத்தி வருகிறார் விஜய்.

அது மட்டுமல்ல அவ்வப்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளை, ரசிகர்களை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது, அவர்களுடன் ஆலோசனை செய்வது எனத் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் விஜய். இந்த நிகழ்வில் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இருந்து பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து பரிசுகளும் பாராட்டு பத்திரமும் வழங்கினார் விஜய்.

அதில் சில மாணவர்கள் விடுபட்டு போனதாக அப்போது ஒரு சலசலப்பும் மற்றும் மனக்குறையும் எழுந்தது. இந்த நிலையில் இந்த நிர்வாகிகள் சந்திப்பின்போது அப்படி விடுபட்ட மாணவர்களையும் அழைத்து அவர்களுக்கு பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார் நடிகர் விஜய்.