இந்திய திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனர்கள் பட்டியலில் உள்ள வெகு சில இயக்குனர்களில் இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலியும் ஒருவர். தொடர்ந்து பிரம்மாண்ட வெற்றிப் படங்களை கொடுத்து தென்னிந்தியா, வட இந்தியா மற்றும் இந்தியாவை தாண்டி உலகெங்கிலும் தனது படங்களுக்கென ரசிகர்களை பெற்றுள்ளார்.
கடந்த வருடம் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆஸ்கார் விருதுக்கு சென்று நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த விருதையும் பெற்று வந்தது.
இந்த விருது நிகழ்வுகள் மற்றும் புரமோஷன் பணிகளுக்காக பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார் ராஜமவுலி. இந்த நிலையில் கடந்த மாதம் சர்ப்ரைஸ் ஆக தமிழகத்திற்கு வந்த ராஜமவுலி குடும்பத்துடன் தமிழகத்தில் உள்ள பல இடங்களை சுற்றிப் பார்த்துள்ளார்.
குறிப்பாக ஸ்ரீரங்கம், தாராசுரம், தஞ்சாவூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களை தரிசித்துள்ளார் ராஜமவுலி. தூத்துக்குடி, மதுரை காளாடுகாத்தான் உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணித்துள்ளார் ராஜமவுலி.
“தமிழகத்தின் மத்திய பகுதியில் சாலைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது என் நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. கோயில்களுக்கு செல்ல விரும்பிய என் மகளுக்காக இந்த பயணத்தை மேற்கொண்டோம். இங்கே கட்டிடக்கலை, அற்புதமான பொறியியல், பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் மற்றும் பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மீக சிந்தனை உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது” என்று கூறியுள்ளார் ராஜமவுலி
.