தெலுங்கு திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத். குறிப்பாக மகேஷ்பாபுவை வைத்து இவர் இயக்கிய போக்கிரி திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அப்படிப்பட்ட பூரி ஜெகன்நாத் கடந்த வருடம் விஜய் தேவரகொண்டாவை வைத்து முதன்முதலாக இந்தியில் இயக்கி வெளியிட்ட லைகர் என்கிற திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. குறிப்பாக முதல் நாளிலேயே அந்த படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது.
இந்த தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக லைகர் வெளியீட்டுக்கு முன்பே விஜய் தேவரகொண்டவை வைத்து ஆர்ப்பாட்டமாக துவங்கப்பட்ட ஜன கன மன என்கிற படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதைத்தொடர்ந்து பூரி ஜெகன்நாத் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி உள்ளிட்ட சீனியர் நட்சத்திரங்களை தேடிச்சென்றும் அவர்கள் பிஸியாக இருப்பதாக கூறி பூரி ஜெகன்நாத்தை தவித்தனர்.
இளம் முன்னணி ஹீரோக்களும் அவர் பக்கம் தங்களது பார்வையை திருப்ப தயாராக இல்லை. இந்த நிலையில் நடிகர் ராம் பொத்தினேனி இயக்குனர் பூரி ஜெகன்நாத்திற்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார். ஏற்கனவே ராமுக்கு ஐ ஸ்மார்ட் ஷங்கர் என்கிற ஹிட் படத்தை பூரி ஜெகன்நாத் கொடுத்துள்ளார்.
அதற்கு நன்றிக்கடனாக பூரி ஜெகன்நாத்திற்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் ராம் பொத்தினேனி. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.