இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்எஸ் தோனி தமிழக மக்களுக்கு இன்னும் கூடுதலாக நெருக்கமானவர். அதனாலோ என்னவோ சினிமா தயாரிப்பில் ஆர்வம் கொண்ட தோனியும் அவரது மனைவியும் தங்களது முதல் படத்தை தமிழ் சினிமாவிலேயே தயாரித்துள்ளனர்.
எல்ஜிஎம் (லெட்ஸ் கெட் மேரீட்) என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்க கதாநாயகியாக லவ் டுடே புகழ் இவானா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் நதியா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு அவரே இசையமைத்தும் உள்ளார் இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் தோனி தனது மனைவியுடன் கலந்து கொண்டு எல்ஜிஎம் படத்தின் இசையை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் பேசிய யோகிபாபு, “படத்தின் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி தனக்கு தோனி தனது கையெழுத்து போட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை எப்படியாவது வாங்கித் தருவதாக கூறினார்.. அதை நம்பி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. ஆனாலும் படப்பிடிப்பை மிக விரைவாக முடித்து விட்டார். அவரது அடுத்த படத்திற்கு எனது கால்சீட்டை பரிசாக தர தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.