சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் மாமன்னன் என்கிற திரைப்படம் வெளியானது. உதயநிதி கதாநாயகன் என்றாலும் கூட இந்த படத்தில் மாமன்னன் என்கிற டைட்டில் கேரக்டரில் கதையின் நாயகனாக நடித்திருந்தவர் வடிவேலு தான்.
இந்த 30 வருடங்களில் அனைவரையும் காட்சிக்கு காட்சி சிரித்து வைத்த வடிவேலுவை இந்த படத்தில் எங்கேயும் நாம் பார்க்க முடியவில்லை. முற்றிலும் ஒரு புதிய மனிதராக மாறிப் போயிருந்தார். இந்த கதாபாத்திரத்தில் அவரது நடிப்பை பார்த்த அனைவருமே இந்த நடிப்பை இவ்வளவு நாள் எங்கே மறைத்து வைத்திருந்தார் என்று கேட்கும் அளவிற்கு அவரிடமிருந்த இன்னொரு புதிய முகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகள் கூட பலரும் அவரது நடிப்பை பாராட்டி வரும் நிலையில் வடிவேலுவின் நடிப்பு குறித்தும் இந்த படம் குறித்தும் பாராட்டி பதிவிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மாரி செல்வராஜின் கலைப்பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்! வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும்.
முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கியிருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும் அபாயம் இருந்தாலும் தனது அபார நடிப்பால் திரையில் முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டியிருக்கும் வடிவேலு சார் இந்த நூற்றாண்டு கண்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
உதய் சார் கேரியரில் இதுவே உச்சம். நிஜ வாழ்வில் ஒரு அரசியல் ஆளுமையாக இருந்தபோதிலும் ஒரு இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் கொடுத்ததோடு இந்த மாபெரும் படைப்பு உருவாக பக்க பலமாக துணை நின்றதில் அவரது நேர்மை வெளிப்படுகிறது.
தமிழரின் பெருமையை தன் இசையின் மூலம் உலகறியச் செய்த ஏ.ஆர்.ரகுமான் இப்படத்தில் தமிழ் உணர்வுகளுக்கு உலகத்தரமான இசையை வழங்கியுள்ளார். தமிழ் பாரம்பரிய இசையையும் இன்டர்னேஷனல் தரத்தையும் ஒற்றைப் புள்ளியில் கொண்டுவந்து இணைப்பதெல்லாம் இசைப்புயலுக்கு மட்டுமே சாத்தியம் சிறந்த கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும்
ஃபகத் ஃபாசிலுக்கு இது இன்னொரு மைல்கல். திரையில் அவரை பார்க்கும் போதெல்லாம் வெறுப்புணர்வு ஏற்படுவதே அவர் நடிப்புக்கு சான்று. மேலும் கீர்த்தி சுரேஷ், மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தேனி ஈஸ்வர் என ஒவ்வொருவரும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி இந்த மாமன்னனுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார்கள்” என்று பாராட்டியுள்ளார்..