இயக்குனர் வினோத் தொடர்ந்து அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களை அடுத்தடுத்து இயக்கினார். சிறுத்தை சிவா போல இவரும் அஜித்துக்கு ரொம்பவே பிடித்தமான இயக்குனர் ஆகிவிட்டார் என்றாலும் கூட, இன்னொரு பக்கம் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்-வினோத் கூட்டணி தொடர வேண்டும் என விரும்பினார். அதன் காரணமாகவே அடுத்தடுத்து மூன்று படங்களில் அவர்கள் இணைந்து பணியாற்றினார்கள்.

அடுத்து யாருடைய படத்தை வினோத் இயக்க இருக்கிறார் என்கிற கேள்வி எழுந்த நிலையில் கமல் படத்தை இயக்கப் போகிறார் என ஒரு பேச்சு அடிபட்டது. சமீப நாட்களாகவே அது கிட்டத்தட்ட உறுதியாகும் நிலையில் தான் இருந்தது.

அதேசமயம் கமல் அடுத்ததாக மணிரத்னம் டைரக்ஷனில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டதால் ஒருவேளை வினோத் படம் தாமதமாகுமோ என்றும் கேள்வி எழுந்தது. மேலும் தெலுங்கில் பிரபாஸ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார் கமல்.

இந்த நிலையில் கமலின் 233 வது படமாக உருவாகும் புதிய படத்தை வினோத் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.. ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கிறது.

மணிரத்னம் கமலை வைத்து இயக்க உள்ள படத்திற்கு முன்னதாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு குறுகிய கால தயாரிப்பாக உருவாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் விவசாயத்தை மையப்படுத்தி அதில் ஒளிந்துள்ள அரசியலை குறிப்பிட்டு உருவாகும் என்றும் சொல்லப்படுகிறது.