நடிகர் ஜெயம் ரவி தமிழ் திரை உலகில் நுழைந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்டன தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தையும் குறிப்பிடத்தக்க ரசிகர் வட்டத்தையும் பெற்றுள்ள ஜெயம் ரவி அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராகவே வலம் வருகிறார்.
ஒரு தனி ஹீரோ என்கிற நிலையில் நடித்து வந்த ஜெயம் ரவி கடந்த வருடமும் இந்த வருடமும் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் அந்த மிகப்பெரிய வரலாற்றுக் கதையின் நாயகனாகவே நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பையும் பெற்றார்.
இதை தொடர்ந்து திரையுலகில் இன்னும் குறிப்பிடத்தக்க உயரத்தை எட்டி பிடித்துள்ளார் ஜெயம் ரவி. இந்த நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் ஜீனி என்கிற புதிய படம் உருவாக இருக்கிறது. இயக்குநர் அர்ஜுனன் ஜெஆர். இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று கதாநாயகிகள் இருக்கின்றனர். சமீபகாலமாக பிரபலமான நடிகை கிர்த்தி ஷெட்டி, நடிகை வாமிகா கபி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க முக்கிய வேடத்தில் தேவயானி நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா பூஜை இன்று நடைபெற்றது
இதில் ஆச்சரியமான விஷயம் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். ஜெயம் ரவி தனி கதாநாயகனாக நடிக்கும் படம் ஒன்றுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது இந்த 20 வருடத்தில் இதுதான் முதல் முறை.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் தான் இசை என்றாலும் கூட அதில் அவர் எப்போதும் மணிரத்னம் படத்திற்கு இசையமைப்பார் என்பதால் அது ஜெயம் ரவிக்காக இசையமைத்த படம் என்று ஆகிவிடாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.