கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மலையாள திரையுலகில் 2018 என்கிற படம் வெளியானது. கடந்த 2018 ஆம் வருடம் கேரளாவையே புரட்டிப்போட்ட பெருமழை வெள்ளமும் அதை அந்த மக்கள் எதிர்கொண்டு சமாளித்த விதமும் அந்த போராட்ட காலகட்டத்தில் மக்களுக்கு துணையாக நின்றவர்களின் தியாகமும் என நடந்ததை நடந்ததாகவே உணர்வுபூர்வமாக இந்த படம் காட்டி இருந்ததால் கேரள மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது.
தமிழகம், ஆந்திராவில் கூட இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கினார். இவர் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு நிவின்பாலி, நஸ்ரியா நடித்த ஓம் சாந்தி ஓசானா என்கிற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.
அதன் பிறகு கடந்த பத்து வருடங்களில் அவர் வெறும் இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். காரணம் அவருக்கு நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்ததால் நடிகராக மாறி பயணித்து வந்தார். இந்த நிலையில் தான் நான் இதுவரை இயக்கி வந்த படங்களின் கதைக்களங்களில் இருந்து மாறுபட்டு இந்த 2018 படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படம் கிட்டத்தட்ட 200 கோடி வசூலித்து மலையாளத்திலே அதிக வசூல் பெற்ற படம் என்கிற பெருமையையும் பெற்றது. இவர் அடுத்ததாக நிவின்பாலியை வைத்து ஒரு படம் இயக்குவதாக சொல்லி வந்தார். இந்த நிலையில் பிரமாண்ட படங்களை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் அடுத்ததாக ஜூட் ஆண்டனி ஜோசப்பின் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிப்பதற்கு அவருடன் ஒப்பந்தம் போட்டு உள்ளது.
ஒரு மலையாள இயக்குனர் முதன் முறையாக லைக்கா நிறுவனத்தில் படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளது ஆச்சரியமான விஷயம் தான். இந்த படத்தின் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் விவரங்கள் குறித்து விரைவில் வெளியாகும் என தெரிகிறது.