சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் என்றாலே படம் ரிலீசாக இருக்கும் முதல் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்தே கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பிக்கும். குறிப்பாக படத்திலிருந்து டீசர், ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் என ஒவ்வொன்றும் வெளியாகும்போது ஒரு குட்டி திருவிழாவாகவே ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
அந்தவகையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்த்து ரசிகர்களிடம் இருந்து வருகிறது. அதே சமயம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற அப்டேட் சமீப நாட்களாகவே கொடுக்கப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அது மட்டுமல்ல அனிருத் இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் தர்பார் என இரண்டு படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருந்தார். அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் இது என்பதால் இந்த படத்திலும் பாடல்கள் அதிரி புதிரியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். அந்த எதிர்பார்பிலும் தவறு ஏதுமில்லை.
அதே சமயம் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்னும் இந்த படத்தின் முதல் சிங்கிள் கூட வெளியாகவில்லையே என்ற வருத்தமும் ரசிகர்களிடம் இருந்து வந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என இன்று அறிவிக்கப்படுவதாகவும் அதற்காக ஒரு புரோமோ வெளியிடப்படுவதாகவும் நேற்று செய்தி வெளியானது. அதன்படி இன்று இந்த படத்தின் புரோமோவும் வெளியாகி உள்ளது.
இதில் வரும் ஜூலை 6ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆகிறது என்கிற தகவலை அறிவித்துள்ளனர். காவாலா என்கிற தெலுங்கு வார்த்தையில் துவங்கும் இந்த முதல் பாடல் படத்தில் தமன்னா பாடும் பாடலாக இடம் பெறுகிறது.
வழக்கம்போல இந்த புரோமோவில் நெல்சனும் அனிருத்தும் பண்ணியிருக்கும் ஜாலி கலாட்டாக்கள் ரசிகர்களை ரசிக்க வைக்கும் விதமாகவே இருக்கின்றன.