இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பீட்சா என்கிற தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் என்றாலும் அதன் பிறகு சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் அவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் தான் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று கார்த்திக் சுப்புராஜை ஒரு கமர்சியல் இயக்குனர் அந்தஸ்துக்கு உயர்த்தியது.
அந்த படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் பெற்று தந்தது. பொதுவாகவே வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை எடுப்பது எல்லா மொழிகளிலும் வாடிக்கையாக மாறிவிட்டது. அந்த வகையில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து இந்த ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை ஜிகர்தண்டா டபுளக்ஸ் என்கிற பெயரில் இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.
இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸும் வில்லனாக எஸ் ஜே சூர்யாவும் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் கிட்டத்தட்ட 70களுக்கு முந்திய காலகட்டத்தில் நடக்கும் ஒரு கதையாக இது உருவாகி வருகிறது என்பது ஏற்கனவே வெளியான இந்த படத்தின் டீசரை பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டார் கார்த்திக் சுப்புராஜ். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கி விட்டதாகவும் தீபாவளிக்கு தியேட்டர்களில் சந்திப்போம் என்றும் கூறியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.