மலையாள திரை உலகில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் மோகன்லால். மலையாளத்தையும் தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் செலெக்ட்டிவ் ஆன படங்களில் நடிக்க தயங்காதவர். அதேபோல பாலிவுட்டிலும் கூட சில படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் பான் இந்திய நடிகருக்கான அனைத்து அம்சங்களும் மோகன்லாலுக்கு இருக்கின்றன. அதேசமயம் அவரது படங்கள் எதுவும் இதுவரை பான் இந்தியா படங்களாக வெளியாகவில்லை.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லாலும் நடித்துள்ளார். இந்தப்படம் பான் இந்திய படம் என்றாலும் இது சூப்பர் ஸ்டார் ரஜினியின் படமாக தான் வெளியாகிறது.
இந்த நிலையில் பாலிவுட் திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பாளரான ஏக்தா கபூர் தயாரிக்க உள்ள விருஷபா என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் மோகன்லால்.
இதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்து தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபல கன்னட நடிகர் நந்தா கிஷோர் இயக்க உள்ளார். இந்தப்படம் மோகன்லாலின் முதல் பான் இந்திய படமாக தயாராக இருக்கிறது.