ஹன்சிகா ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரை உலகில் முழுவீச்சில் தனது கவனத்தை செலுத்த துவங்கி உள்ளார். அந்த வகையில் நடிகர் ஆதியுடன் இவர் இணைந்து நடித்துள்ள பாட்னர் என்கிற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் கதைப்படி நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடிப்பவர் சமீபத்தில் வெளியான தலைநகரம் 2 படத்தில் கதாநாயகியாக நடித்த பாலக் லால்வனி தான். ஆதியின் நண்பராக யோகி பாபு நடிக்கிறார்.
ஒருநாள் இரவு ஆதி, யோகிபாபு இருவரும் ஒன்றாக தூங்கி எழும்போது மறுநாள் காலை யோகிபாபு அழகான பெண்ணாக அதாவது ஹன்சிகாவாக உருமாறி இருக்கிறார். இதற்கு காரணம் விஞ்ஞானி சின்னி ஜெயந்த் இவருக்கு போட்ட ஒரு ஊசி தான்.
அதன் பிறகு ஆதியுடன் ஹன்சிகா தான் படம் முழுக்க பயணிப்பார் என்றாலும் அவர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என்பதால் யோகிபாபுவின் குணாதிசயங்கள் ஹன்சிகாவிடமும் இருக்குமாம்.
இதை தனது கதாபாத்திரத்தில் பிரதிபலிப்பதற்காக படப்பிடிப்பில் யோகிபாபுவின் நடை உடை பாவனைகளை தொடர்ந்து கண்காணித்து அதை தனது நடிப்பில் கொண்டு வர முயற்சித்துள்ளாராம் ஹன்சிகா. கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது. படத்திலும் அதை சிறப்பாக செய்திருந்தால் நிச்சயம் வெற்றி படமே.