கரகாட்டத்தை மையப்படுத்தி வெளியான கரகாட்டக்காரன் படம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றது என சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதன் பிறகு அதே பாணியில் வெளியான நாட்டுப்புறப் பாட்டு, எட்டு பட்டி ராசா உள்ளிட்ட பல படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சமீப வருடங்களாக அது போன்ற கதை அம்சம் கொண்ட படங்கள் வருவது இல்லை. இந்த நிலையில் அந்த குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் காடப்புறா கலைக்குழு.
இந்த படத்தில் கதையின் நாயகர்களாக முனீஸ்காந்த் மற்றும் காளி வெங்கட் இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் ராஜா குருசாமி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை ஸ்வேதா ரமேஷ், ஸ்ரீலேகா ராஜேந்திரன், டெலிபோன் ராஜ், சூப்பர்குட் சுப்பிரமணி, சுவாதி முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
ஹென்றி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 7ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட முனீஸ்காந்த் பேசும்போது, “இந்தப்படம் முண்டாசுப்பட்டி படம் போன்று ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளோம், அனைவரும் இணைந்து கலகலப்பாகப் படப்பிடிப்பை நடத்தினோம், இயக்குநர் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார், இந்தப் படத்தின் மீது மிகவும் நம்பிக்கை வைத்து இரவு பகல் பாராமல் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படி ஒரு கலைப் படைப்பை உருவாக்கியுள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. நான் இந்த படத்தில் கரகாட்டம் ஆட முயற்சி செய்துள்ளேன், அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது” என்று கூறினார்.
நடிகர் காளி வெங்கட் பேசும்போது, “எனக்கு இது மிக முக்கியமான படம், இயக்குநர் குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கம். ராஜா குருசாமி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் படம் செய்தது எனக்கு மகிழ்ச்சி. அவருக்குப் படம் தந்ததற்காகத் தயாரிப்பாளருக்கு நன்றி. தயாரிப்பாளர் புரொடக்சனில் தேவைப்படும் அத்தனையும் வாங்கி வைத்து விட்டார். கண்டிப்பாகத் தொடர்ந்து படம் எடுப்பார், அவருக்கு வாழ்த்துக்கள். ஹென்றி மிக எளிமையாக அனைவருக்கும் பிடிக்கும் படி இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் முனீஷ்காந்த் இங்கு ஆடியதை வீடியோவில் பார்த்தேன் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவது மிக மகிழ்ச்சி. லோகேஷனில் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்தார்கள் அவருக்கு நன்றி. தனுஷ் சார் இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துப் பாராட்டினார்” என்று கூறினார்.