தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நுழைந்து தெலுங்கு திரையுலகில் தனக்கென நிலையான இடத்தை பிடித்த பிறகு அவரது குடும்பத்தில் இருந்து அவரது சகோதரர்கள், அதன்பிறகு அவரது மகன் ராம்சரண் உள்ளிட்ட பலரும் சினிமாவில் நடிகர்களாக நுழைந்து மிகப்பெரிய இடங்களை பிடித்தனர்.
குறிப்பாக சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் 10 வருடங்களுக்கு முன்பே இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான மகதீரா என்கிற படத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானார். அப்போதே அவருக்கும் அப்பல்லோ குழுமத்தை சேர்ந்த உபாசனா காமினேனி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
மகிழ்ச்சியான தம்பதியாக இவர்கள் வலம் வந்தாலும் இவர்களுக்கென ஒரு குழந்தை இல்லாதது சிரஞ்சீவி குடும்பத்திலேயே பல வருடங்களாக ஒரு மனக்குறையாக இருந்தது.
இந்த நிலையில் இந்த குறை நீங்கும் விதமாக கடந்த வருடம் உபாசனா கர்ப்பமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
இந்த நிலையில் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தியுள்ளார் தாத்தாவான சிரஞ்சீவி. குழந்தைக்கு கிலின் காரா என பெயர் சூட்டியுள்ளனர்.