மைனா படம் மூலம் பிரபலமான நடிகர் விதார்த் அதை தொடர்ந்து கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பையோ வெற்றியையோ பெறவில்லை. ஆனால் சமீப வருடங்களாக நல்ல கதை, நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விதார்த்.
அதனால் படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் சோபிக்காவிட்டாலும், அவர் நடிப்புக்கு பாராட்டுக்களும், நடித்த படத்திற்கு விருதுகளும் அவ்வப்போது கிடைத்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது அறிமுக இயக்குனர் சகோ கணேசன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் விதார்த். இந்த படத்தின் துவக்க விழா பூஜை இன்று நடைபெற்றது.
ஹைபர்லிங்க் க்ரைம் திரில்லராக உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ராதா ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி உலகில் பல அற்புதமான திரைக்கதைகள் உருவாகியுள்ளன. அந்த வகையில் ஒரு கொலையில் தொடர்புடைய நான்கு பேரின் சூழலை ஹைபர்லிங்க்காக இணைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சகோ கணேசன் இயக்குநர்கள் P.வாசு, தங்கர் பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.