உலக சினிமா வரலாற்றிலேயே உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருதுதான். அனைத்து நாடுகளில் இருந்தும் உள்ள படைப்பாளர்கள் தங்கள் மிகப்பெரிய லட்சியமாக கருதுவது எப்படியாவது ஆஸ்கர் விருது பெற்று விட வேண்டும் என்பதுதான்.
முன்பு ஒரு காலத்தில் இந்திய சினிமாவுக்கு இதெல்லாம் சாத்தியமா என்கிற ஒரு சூழல் இருந்தது. இந்த நிலை மாறி ஏ.ஆர் ரகுமான். சமீபத்தில் ராஜமவுலி ஆகியோர் தென்னிந்திய சினிமாவிற்கு ஆஸ்கர் பெற்று வந்து சாதித்துக் காட்டினார்கள்.
இங்கே தமிழ் சினிமாவில் இருந்து இந்திய சினிமாவின் பங்களிப்பாக மணிரத்னம் படங்கள் எப்படியாவது ஆஸ்கர் விருதை நமக்கு பெற்று தரும் என்று எதிர்பார்ப்பு பல வருடங்களாகவே ரசிகர்களிடம் இருந்து வருகிறது. அதே சமயம் அவர் படங்கள் ஆஸ்கர் விருது பெற்று தரவில்லை என்றாலும் ஆஸ்கர் விருதுக்குழு அவரைத் தேடி அழைப்பு விடுத்துள்ளது.
ஆம். இந்த 2023 ஆம் வருடத்திற்கான ஆஸ்கர் விருது படங்களுக்கான தேர்வு குழு உறுப்பினர்களில் ஒருவராக மணிரத்னம் இணைந்துள்ளார். அவர் மட்டுமல்ல தமிழிலிருந்து ஒளிப்பதிவாளர் கே கே செந்தில்குமார், தெலுங்கில் இருந்து இசை அமைப்பாளர் மரகதமணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரும் இந்த தேர்வு குழுவில் இணைந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக கடந்த வருடம் ஏ.ஆர் ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் ஆஸ்கர் விருது தேர்வு குழு பட்டியலில் இடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.