‘மௌனம் பேசியதே’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். தொடர்ந்து, ‘ராம்’, ‘பருத்தி வீரன்’, ‘ஆதி பகவான்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்திய அமீர் ‘யோகி’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அதனைத் தயாரித்தும் இருந்தார்.
பின்பு ‘யுத்தம் செய்’, ‘வட சென்னை’, உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ‘உயிர் தமிழுக்கு’ என்ற அரசியல் கதையை மையமாகக் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். விரைவில் அந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து அடுத்ததாக யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான யூ ஒன் ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் அமீர். இது குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 29ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக அமீர் அறிவித்துள்ளார்.
இந்த படத்தில் அமீருடன் நடிகர் ஆர்யாவின் தம்பியான சத்யா, சஞ்சிதா, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார்.
அமீர் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகிய மௌனம் பேசியதே படத்தில் இருந்து அவரது அனைத்து படங்களிலும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார். அவர்களது நட்பு கூட்டணி தற்போது வரை வெற்றிகரமாக தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது