யோகிபாபு கதையின் நாயகனாக நடித்த மண்டேலா என்கிற வெற்றி படத்தை இயக்கி தேசிய விருதும் பெற்றவர் இயக்குனர் மடோன் அஸ்வின். இதை அடுத்து இவருக்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, சீனியர் நடிகை சரிதா, மிஸ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சங்கர் என்கிற புதுமுகம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் வரும் ஜூலை 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை இரண்டாம் தேதி நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வழக்கம் போல நட்சத்திர ஹோட்டல்களிலோ அல்லது நேரு உள் விளையாட்டு அரங்கிலோ அல்லாமல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

இதற்காக தாம்பரம் அருகில் உள்ள சாய்ராம் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் மாவீரன் படம் குறித்து அதிக ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு புரமோஷன் நிகழ்ச்சியை கல்லூரியில் ஏற்பாடு செய்துள்ளார்கள் என்று தெரிகிறது.