விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானதிலிருந்து இயக்குனர் வெற்றிமாறனுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்து வந்தன. அதற்கு அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் இன்னும் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் சம்பந்தமான படப்பிடிப்பு பணிகளில் வெற்றிமாறன் கவனம் செலுத்தி வருகிறார்.

இதேபோன்று ஏற்கனவே வடசென்னை படத்திற்கும் அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என சொன்னவர் அதன்பிறகு அதுபற்றி பெரிய அளவில் அலட்டிக் கொள்ளவில்லை.

அதேபோல சூர்யாவை வைத்து வாடிவாசல் என்கிற படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார் என்பது தெரிந்ததுதான். ஆனால் அந்த படத்திற்கும் சில நாட்கள் டெஸ்ட் சூட் என்பது போல படப்பிடிப்பை நடத்தியதோடு சரி.. அதன்பிறகு அந்தப் படத்தின் நிலை என்ன என்பதும் ரசிகர்களிடம் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சங்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன் பேசும்போது, வடசென்னை இரண்டாம் பாகம் நிச்சயம் வெளியாகும். அதேபோல சூர்யாவின் வாடிவாசல் படமும் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெறும் காளை போல இன்னொரு ரோபோ காளை ஒன்று அனிமேட்ரானிக்ஸில் உருவாக்கப்பட்டு வருகிறது.

விடுதலை-2 படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் வாடிவாசல் துவங்கும். அந்த படத்தை முடித்துவிட்டு வடசென்னை இரண்டாம் பாகத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படும்” என்று கூறினார் வெற்றிமாறன். இதனை தொடர்ந்து தனுஷ் மற்றும் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.