சுந்தர் சி நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் தலைநகரம். அந்த படத்தில் மூலம் தான் இயக்குனர் சுந்தர் சி கதாநாயகனாகவும் மாறினார். அதைத் தொடர்ந்து தற்போது அந்தப் படத்தின் பேரிலேயே இரண்டாம் பாகம் போல தலைநகரம் 2 என்கிற படம் கடந்த வெள்ளியன்று வெளியானது.

டைட்டிலும் கதாநாயகனும் அவரது கதாபாத்திர பெயரும் மட்டுமே முதல் பாகத்துடன் சம்பந்தப்பட்டவை. மற்றபடி இந்த கதை முற்றிலும் மாறுபட்டதாக உருவாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் வி.இசட் துரை இயக்கியுள்ளார். முதல் பாகத்தைப் போல பெரிய அளவு இல்லாவிட்டாலும் இந்த படம் டீசன்டான வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தை வெளியிட்ட சுப்புலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 350 க்கு மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படத்தை வெளியிட்டுள்ளது. இப்படி இவ்வளவு அதிக தியேட்டர்களில் வெளியிடும் தகவலை கேள்விப்பட்ட சுந்தர் சி மிகவும் ஆச்சரியப்பட்டு போனார். இது குறித்த வியப்பை இன்று நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிக்கையாளர் நன்றி சந்திப்பிலும் வெளிப்படுத்தினார் சுந்தர்சி.

காரணம் 200 தியேட்டர்கள் என்றாலே அது மிகப்பெரிய விஷயம். 350 தியேட்டர்கள் என்று விநியோகஸ்தர்கள் கூறியபோது பிரமிப்பாக இருந்தது.. பயமாகவும் இருந்தது.. அதே சமயம் வினியோஸ்தர்கள் விவேகானந்தன் மற்றும் ரவி இருவரும் என்னைவிட இந்த படத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்து வெளியிட்டார்கள். அதற்கான ரிசல்ட் இப்போது தெரிகிறது” என்று கூறினார்.