கடந்த சில வருடங்களுக்கு முன்பு சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் தர்மதுரை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ஆண்டிபட்டி கணவா காத்து ஆள தூக்குதே என்கிற பாடல் படம் வெளியான போதே பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அது மட்டுமல்ல ஏற்கனவே ஆறு தேசிய விருதுகளை பெற்றிருந்த கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஏழாவதாகவும் ஒரு தேசிய விருதை இந்த பாடல் பெற்று தந்தது.

மேலும் யூட்யூபில் அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த பாடல் நூறு மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக கவிஞர் வைரமுத்து இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது, “ சீனுராமசாமி இயக்கிய யுவன்சங்கர்ராஜா இசைத்த ‘தர்மதுரை’ எனக்கு ஏழாம் தேசிய விருது பெற்றுத் தந்த படமாகும். அதில் இடம்பெற்ற ‘ஆண்டிபட்டிக் கணவாக்காத்து’ 10கோடிப் பார்வையாளர்களைக் கடந்திருப்பது பெருமை மற்றும் பெருமிதம். எங்கள் தலைகளை தேவதைகள் கோதுகின்றன” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்