அரசியல் குடும்பத்தில் இருந்து சினிமாவில் முதலில் தயாரிப்பாளராக நுழைந்தவர் உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு அவருக்கு இருந்த நடிப்பு ஆர்வத்தால் கதாநாயகனாக மாறி நகைச்சுவை கலந்த படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதைத் தொடர்ந்து மனிதன், நெஞ்சுக்கு நீதி, கலகத்தலைவன் உள்ளிட்ட சற்று சீரியசான படங்களிலும் நடித்தார். அந்தவகையில் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த சமயத்தில் தான் உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதனால் மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் மாமன்னன் தான் தனது கடைசி படம் என்றும் இனிமேல் படங்களில் தற்போதைக்கு நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார்.
அவர் அமைச்சராவதற்கு முன்னதாக நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சினிமாவை விட்டு தற்போது உதயநிதி ஒதுங்கினாலும் கூட நான் தயாரிக்க உள்ள படத்தை உதயநிதிக்காக காத்திருக்கும் என நடிகர் கமல் அவருக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இந்த தகவலை தற்போது உதயநிதியே தெரிவித்துள்ளார்.