V4UMEDIA
HomeNewsKollywoodதிருவண்ணாமலை சமூக சேவருக்கு ஆம்புலன்ஸ் வழங்கி ஊக்கப்படுத்திய சூப்பர் ஸ்டார்

திருவண்ணாமலை சமூக சேவருக்கு ஆம்புலன்ஸ் வழங்கி ஊக்கப்படுத்திய சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினியை பொறுத்தவரை வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என உதவி செய்பவர். அதேசமயம் அவரால் உதவி பெற்றவர்கள் மூலமாகத்தான் அந்த உதவியே வெளியே தெரிய வரும். அப்படி கஷ்டப்படுபவர்களுக்கு மட்டும் உதவி செய்யாமல், கஷ்டப்படுபவர்களுக்காக உதவி செய்கிறார்களே அவர்களையும் அழைத்து கௌரவப்படுத்துவதும் அவர்களுக்கு தேவையான இன்னும் உதவிகளை செய்து கொடுத்து ஊக்கப்படுத்துவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இன்னொரு குணம்.

அந்த வகையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன் என்பவரை அழைத்து அவருக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த அளவிற்கு மணிமாறன் என்ன செய்து விட்டார் என்கிற கேள்வி பலருக்கும் எழும்.

திருவண்ணாமலையை சேர்ந்த மணிமாறன் யாராவது ஆதரவற்ற நபர்கள் இறந்து விட்டால் அவர்களது உடலை மருத்துவமனையில் இருந்து பெற்று கடந்த நல்லடக்கம் செய்யும் சேவையை 21 வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார். அது மட்டுமல்ல தொழு நோயாளிகளுக்கும் கூட அவர் உதவி வருகிறார். இதன் காரணமாகவே இவரது சேவையை பாராட்டி மத்திய மாநில அரசுகள் அவருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளன. கொரோனா காலகட்டத்தில் கூட, இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்யும் பணியை விடாது செய்து வந்துள்ளார் மணிமாறன்.

இந்த நிலையில் இவரது சேவையை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக இவரது சேவைக்கு உதவியாக இருக்கட்டும் என தனது அறக்கட்டளை மூலமாக சொந்தமாக ஆம்புலன்ஸ் ஒன்றை பரிசளித்துள்ளார்.

மேலும் இந்த வாகனத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியின் கையாலேயே பெற மணிமாறன் ஆசைப்பட்டபோது அவரை சென்னைக்கு வரவழைத்து அவரிடம் ஆம்புலன்ஸ் சாவியை ஒப்படைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாரை சந்தித்த பரவசத்தில் இருந்து இன்னும் பிரமிப்பு விலகாமல் இருக்கும் மணிமாறன் அந்த சந்திப்பு குறித்து கூறும்போது, இதற்கு முன்னதாக நான் டெல்லி சென்ற போது முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ பி ஜே அப்துல் கலாம் ஐயா எப்படி எனக்கு விருந்தோம்பல் அளித்தாரோ அதற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இல்லத்தில் தான் அப்படி ஒரு விருந்தோம்பல் எனக்கு கிடைத்தது. அவர் செய்துள்ள இந்த உதவி என்னுடைய சமூக சேவையை இன்னும் ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments