தெலுங்கு திரையுலகில் மிக பிரபல ஹீரோவான சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இளம் முன்னணி ஹீரோவாக நடித்து வரும் ராம்சரண் சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய நடிகராக உயர்ந்துள்ளார்.

பத்து வருடங்களுக்கு முன்பு அப்பல்லோ குழுமத்தைச் சேர்ந்த உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராம்சரண். அதே சமயம் கடந்த 10 வருடங்களாக இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லாதது அவர் குடும்பத்தில் மட்டுமல்ல அவர்களின் நட்பு வட்டாரங்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடம் கூட வருத்தத்தை ஏற்படுத்தின.

இந்த நிலையில் கடந்த வருடம் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தார் உபாசனா. இதனைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. சில தினங்களுக்கு முன்பு உபாசனா அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்று எடுத்தார்.

தெலுங்கு திரை உலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது ராம்சரண், உபாசனா தம்பதியினர் தங்களது குழந்தையுடன் இன்று தங்களது வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவர்கள் கிளம்பும்போது அங்கு இருந்த ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, பின்னர் வீடு திரும்பினர்.