மலையாள திரையுலகில் சமீபகாலமாக எத்தனையோ புதுமுக நடிகை வந்துவிட்டாலும் கூட கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தற்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். தொடர்ந்து மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்த அவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழில் அவர் நடித்த முதல் படமே அவருக்கு மிகப்பெரிய ஓபனிங் ஆக அமைந்துவிட்டது. அதை தொடர்ந்து இந்த வருட துவக்கத்தில் அஜித்துடன் அவர் இணைந்து நடித்த துணிவு படமும் வெளியாகி அவரது நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை காட்டியது.

இந்த நிலையில் தற்போது தமிழில் அவரது மூன்றாவது படமாக மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் உருவாகிறது. எஃப் ஐ ஆர் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் மனு ஆனந்த் இந்த படத்தை இயக்குகிறார்.

ஆர்யா கதாநாயகனாக நடிக்க, முக்கியமான சவாலான வேடத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் தவிர அனகா என்கிற இன்னொரு கதாநாயகியும் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் எப்படி மஞ்சு வாரியரிடம் கதை சொல்லி சம்மதிக்க வைத்தேன் என்பது குறித்து இயக்குனர் மனு ஆனந்த் கூறியுள்ள தகவல் ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கிறது.

அதாவது முதலில் மஞ்சுவாரியரிடம் கதை சொன்னாராம் மனு ஆனந்த். கதையை கேட்டதும் முழு திரைக்கதையும் வசனத்துடன் கூறும்படி சொன்னாராம் மஞ்சு வாரியர். அதன்படி பக்காவாக தயார் செய்து கொண்டு மீண்டும் இரண்டு மாதம் கழித்து திரைக்கதையுடன் கூறியுள்ளார் மனு ஆனந்த்.
அதன் பிறகும் முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுங்கள், படித்துவிட்டு சொல்கிறேன் என்று கூறினாராம. அதன்பிறகு ஸ்கிரிப்ட் படித்த பின்னரே இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் மஞ்சு வாரியர்.
படங்களை அவர் தேர்ந்தெடுக்கும் விதம், எதனால் அவர் தொடர் வெற்றி பெறுகிறார் என்பது அவர் கதையை கேட்கும் விதத்தில் இருந்தே நன்றாக தெரிகிறது.