கலகலவென பொழுதுபோக்கு படங்களை கொடுக்கும் கமர்சியல் இயக்குனரான சுந்தர்.சி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வெளியான தலைநகரம் என்கிற படத்தில் மூலம் நடிகராகவும் மாறினார். சுராஜ் இயக்கத்தில் வெளியான அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் சுந்தர்.சியை தொடர்ந்து ஹீரோவாக பயணிக்க வைத்தது.

இந்த நிலையில் அந்த படத்தில் இரண்டாம் பாகம் தலைநகரம் 2 என்கிற பெயரில் நாளை ஜூன் 23 வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த சுந்தர்.சியே இதிலும் கதாநாயகனாக நடித்திருந்தாலும் இந்த படத்தை இயக்குனர் வி இசட் துரை இயக்கியுள்ளார்.

அதே சமயம் முதல் பாகத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர் காமெடி மிகப்பெரிய வரவேற்பு பெற்றதுடன் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அதே போன்று தலைநகரம் 2 படத்திலும் காமெடி காட்சி இடம் பெறுமா என்று இயக்குனர் சுந்தர் சியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுந்தர்.சி இந்த படத்தின் காமெடியே இல்லை.. படம் முழுக்கவே சீரியஸ் ஆக விறுவிறுப்பாக நகரும். முதல் பாகம் உருவான சமயத்தில் இருந்த ட்ரெண்ட் வேறு.. அதனால் அந்த படத்தில் ஆக்சன், காமெடி, காதல், சென்டிமென்ட் என எல்லாம் கலந்து இருந்தன. ஆனால் இப்போது உள்ள சூழல் வேறு.

இப்போதைய ரசிகர்கள் எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த விஷயத்திலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அந்த அளவிற்கு விறுவிறுப்பான திரைக்கதையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதனால் தலைநகரம் 2 படத்தில் காமெடி இருந்தால் அது படத்தின் வேகத்தை குறைத்து விடும். எனவே இந்த படத்தில் காமெடி காட்சிகள் இடம்பெறவில்லை என்று கூறியுள்ளார் சுந்தர் சி.