மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நிவின்பாலி நடிப்பில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிரேமம். அந்த படத்தின் மூலம் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் என மூன்று கதாநாயகிகள் தென்னிந்திய திரை உலகிற்கு கிடைத்தனர்.

அதை தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் படம் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன் கடந்த வருடம் நயன்தாரா பிருத்திவிராஜ் நடித்த கோல்டு என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது.

இந்த நிலையில் தற்போது தமிழில் நேரடியாக படம் இயக்குகிறார் அல்போன்ஸ் புத்ரன். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் அந்த படத்தின் நடிக்கும் முக்கிய நடிகர்கள் குறித்த தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக நடன இயக்குனர் சாண்டி நடிக்கிறார் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மிகப் பிரபலமானவர்.

தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்து வரும் சாண்டி அல்போன்ஸ் புத்ரன் டைரக்சனில் கதாநாயகனாக நடிப்பதை மோதிரக்கையால் குட்டுப்பட்டுள்ளார் என்று தாராளமாக கூறலாம்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.