குறுகிய காலத்தில் வெறும் நான்கு படங்களை மட்டுமே இயக்கி இயக்குனர் ஷங்கர், மணிரத்னம் ஆகியோருக்கு அடுத்தபடியாக. சொல்லப்போனால் அவர்களுக்கு இணையாக ரசிகர்களிடம் புகழ்பெற்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம் படத்தில் துவங்கி அடுத்ததாக கைதி, மாஸ்டர், மிகப்பெரிய வெற்றியை பெற்ற விக்ரம் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து, ரசிகர்களை தன்னுடைய அடுத்த படங்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கும் அளவிற்கு கொண்டு வந்து வைத்து விட்டார்.
தற்போது விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்து லியோ என்கிற தனது ஐந்தாவது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்று நான் பத்து படங்கள் வரை தான் அநேகமாக இயக்குவேன் அதன்பிறகு படம் இயக்க மாட்டேன் என்பது போன்று அவர் கூறியுள்ள தகவல்தான் தற்போது ரசிகர்களை அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைய வைத்துள்ளது.
சில இயக்குனர்கள் இப்படித்தான் தங்களுக்கு மன நிறைவு இருக்கும் வரை மட்டுமே தங்களது துறையில் பயணிப்பார்கள்.. போதும் என நினைத்து விட்டால் யார் தடுத்தாலும் அங்கே நிற்காமல் வெளியேறி விடுவார்கள்.. இதற்கு அரசியல் மட்டுமல்ல சினிமாவிலும் சில உதாரணங்கள் இருக்கின்றன. லோகேஷ் கனகராஜும் அப்படித்தான்..
தனக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் திருப்தி தரும் பத்து படங்களை கொடுத்தாலே தனது திரையுலக பயணம் நிறைவு பெற்றது என்பது போன்று அவர் நினைக்கிறார் போலும். அதனால்தான் இப்படிப்பட்ட ஒரு முடிவை இப்போதே அவர் அறிவித்து ரசிகர்களை மனதளவில் தயார் படுத்துகிறார் என்று தெரிகிறது.