இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் முதல் ஜிவி.பிரகாஷ், அனிருத் வரை இசையமைப்பாளர்கள் அனைவருமே உள்ளூரிலோ அல்லது வெளிநாடுகளோ இசை நிகழ்ச்சி நடத்துவது வாடிக்கையான ஒன்றுதான். சமீப காலமாக இவர்கள் அனைவரும் தொடர்ந்து தங்களது லைவ் கான்சர்ட் நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இவர்களுக்கு இணையாக தானும் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா. இந்த நிகழ்ச்சி ஜூலை ஒன்றாம் தேதி இரவு 8 மணிக்கு துவங்கி இரண்டு மணி நேரம் நடைபெற உள்ளது
கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் தாக்குப்பிடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. தொடர்ந்து சீரான இடைவெளியில் படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியாவின் கைவசம் தற்போது மட்டும் அரை டஜன் படங்கள் உள்ளன
இந்த நிலையில் தான் ஆண்ட்ரியா வரும் ஜூலை ஒன்றாம் தேதி கோவையில் . ஆண்ட்ரியா லைவ் இன் கோவை என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆண்ட்ரியா கூறும்போது, “இந்த நிகழ்ச்சியில் இளையராஜா முதல் பல இசையமைப்பாளர்களின் பாடல்களை பாட உள்ளேன். அதில் நான் பாடி ஹிட் ஆன ஹூ இஸ் தி ஹீரோ, கூகுள் கூகுள், ஊ சொல்றியா மாமா என பல பாடல்கள் பாட உள்ளேன். கடந்த 15 ஆண்டுகளாக இசையை படித்து வருகிறேன். அதுதான் இப்போது என்னை பாட வைக்கிறது” என்று கூறியுள்ளார்.