எண்பது தொண்ணூறுகளின் காலகட்டத்தில் தொடர்ந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்து மக்கள் நாயகனாக, வெற்றிகரமாக நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவக்கியுள்ளார். இந்தப்படம் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் ராமராஜன்.
அந்த வகையில் கார்த்திக் குமார் வி என்பவர் டைரக்ஷனில் மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை பேசும் படத்தில் நடிக்கிறார் ராமராஜன். இந்த கார்த்திக் குமார் தான் ராமராஜன் நடித்து வரும் சாமானியன் படத்தின் கதாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாமானியன் படத்தின் கதை ராமராஜனுக்கு ரொம்பவே பிடித்துப் போனதால் அந்தப் படம் முடிவடைந்ததுமே கதாசிரியரை அழைத்து மீண்டும் தான் ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் அதற்கு உங்களிடம் கதை இருக்கிறதா என்று ராமராஜனின் வாண்டட் ஆக கதை கேட்டுள்ளார். அப்படி கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படம்தான் இது. ராமராஜனின் 46 ஆவது படமாக உருவாக இருக்கிறது.
சாமானியன் படத்தை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் V.மதியழகன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் முதன் முதலாக நடிகராகவும் அவதாரம் எடுக்கிறார். சாமானியன் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா தான் இசையமைக்கிறார் தற்போது இந்த படத்தின் டீசர் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.