சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக ஜூலை 14ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் மாவீரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே நடித்த இந்த டைட்டில் தற்போது அவரது ரசிகரான சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருப்பது ஆச்சரியமான ஒன்று.

இந்த படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். விருமன் படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் இது. இந்த படத்தில் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

காரணம் இந்த படத்தை இயக்கியுள்ள இயக்குனர் மடோன் அஸ்வின் இதற்கு முன்னதாக அவர் அறிமுகமான மண்டேலா திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தவர் தான் யோகிபாபு. அந்த படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் யோகிபாபு. அந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

அதுமட்டுமல்ல, மாவீரன் படத்தில் இயக்குனர் மிஸ்கின் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் இருவரும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் மிஸ்கினுக்கு குறைந்த அளவிலான வசனங்களே பேசும் கதாபாத்திரத்தை கொடுத்துள்ளாராம் இயக்குனர் மடோன் அஸ்வின். பொதுவாக பேட்டிகளிலும் சினிமா நிகழ்ச்சிகளிலும் கலகலவென நிறுத்தாமல் பேசும் மிஸ்கினுக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் என்பது அவருக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும்.