நகைச்சுவை படங்களை இயக்குவதில் வல்லவராக, கமர்சியல் வெற்றிகளை கொடுக்கும் இயக்குனராக வலம் வந்த சுந்தர்.சி கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக தலைநகரம் என்கிற படத்தின் மூலம் ஒரு ஹீரோவாகவும் அடி எடுத்து வைத்தார். இப்போது வரை இயக்குனராகவும் கதாநாயகனாகவும் வெற்றிகரமாக இரட்டைக் குதிரை சவாரியும் செய்து வருகிறார்.
சுந்தர்.சி சீரான இடைவெளியில் படங்களை இயக்குவதுடன் தன்னை தேடி வரும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அப்படி தற்போது அவர் அறிமுகமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமே தலைநகரம் 2 என்கிற பெயரில் தயாராகியுள்ளது.
தலைநகரம் படத்தை சுந்தர் சி யின் சீடரான சுராஜ் இயக்கியிருந்தார். இந்த தலைநகரம் 2 படத்தை இயக்குனர் வி.இசட் துரை இயக்கியுள்ளார். இதற்கு முன்னதாக இருட்டு என்கிற படத்தில் சுந்தர்.சியும் துரையும் இணைந்து பணியாற்றி இருந்தனர்.
வரும் ஜூன் 23ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இயக்குனர் சுந்தர் சி பேசும்போது, ‘ஆஸ்கர் ரவிச்சந்திரன் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும், தலைநகரம் டைட்டில் அவரிடம் தான் இருந்தது, அவர் பெருந்தன்மையாகத் தந்தார். தலைநகரம் 2 ஆம் பாகத்தை நாம் எடுக்கலாம் என்று யார் சொன்னாலும் கேட்டிருக்க மாட்டேன் ஆனால் துரை சார் கேட்ட போது எனக்கு எந்த யோசனையும் இல்லை. உடனே ஓகே சொல்லி விட்டேன். அவரின் இருட்டு படம் மிக அருமையான திரைக்கதை. அந்தப்படத்தை அவர் எடுத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. இருட்டு வெற்றி தான் தலைநகரம் படத்திற்கு ஓகே சொல்ல வைத்தது.
இன்னும் நான் படமே பார்க்கவில்லை அவர் மீதான நம்பிக்கைதான் காரணம். சினிமாவை காதலிக்கும் இயக்குநர்.அவருக்குப் பெரிய சப்போர்ட்டாக இருந்த தயாரிப்பாளர் பிரபாகரனுக்கு என் நன்றிகள். இந்தப்படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் துரை சார் செதுக்கியிருக்கிறார். அரண்மனை போல் இந்தப்படமும் எனக்குத் தொடர் படங்களாக அமையும் என நம்புகிறேன்” என்று கூறினார்.