முண்டாசுப்பட்டி என்கிற படம் மூலம் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் முனீஸ்காந்த். அவரது சினிமா பெயர் ராமதாஸ் என்றாலும் இந்த படத்தில் அவர் நடித்த முனீஸ்காந்த் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய அளவில் ரீச் ஆனதால் இப்போது அதே பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறார்.
அதே சமயம் தொடர்ந்து பல படங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வேலையும் செய்து வருகிறார். இதே போலத்தான் இவருக்கு சற்று முன்னதாக சினிமாவில் அறிமுகமான காளி வெங்கட் இன்னொரு நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்ல இவர்கள் இருவரும் இணைந்து கூட பல படங்களில் நடித்துள்ளனர். இதற்கு முன்பு வெளியான கட்டா குஸ்தி, சமீபத்தில் வெளியான வீரன் உள்ளிட்ட படங்களில் இவர்களது காமெடி கூட்டணி வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து காடப்புறா கலைக்குழு என்கிற படத்தில் நடிக்கிறார்கள். இது ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தில் முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் அவர் கரகாட்டம் ஆடும் கலைஞராக நடிக்கிறார். காளி வெங்கட் அதற்கு இணையான இன்னொரு கதாபாத்திரத்தில் தவில் வாசிக்கும் கலைஞராக நடிக்கிறார்.
இந்த படத்தை ராஜா குருசாமி என்கிற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். ஏற்கனவே யோகிபாபு கதையின் நாயகனாக நடித்து வரவேற்பை பெற்ற நிலையில் முனீஸ்காந்திற்கும் அந்த யோகம் இருக்குமா என்பது காடப்புறா கலைக்குழு படம் வெளியாகும் போது தெரியவரும்.