திரையுலகில் இப்போது நுழையும் நடிகைகளுக்கு கூட சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எப்படியாவது ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது இணைந்து நடித்து விட வேண்டும் என்கிற ஆசை கட்டாயம் இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து இப்போதும் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவுக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா என்ன..?

அந்த நீண்ட நாள் ஆசை தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் மூலம் நிறைவேறி உள்ளது. இந்த படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமன்னாவிற்கு ஆன்மீக பயணத்திற்கான புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து பெரும் மகிழ்ச்சி அடைந்த தமன்னா கூறும்போது, “சூப்பர் ஸ்டார் கொடுத்த இந்த பரிசை என்றென்றும் மறக்க மாட்டேன். அவருடன் பணியாற்றியது கனவு நினைவான தருணம். ஜெயிலர் படத்தில் நான் கலந்து கொண்ட நாட்களை இறுதி வரை எப்போதும் நினைத்துப் பார்த்து ரசிப்பேன்” என்று கூறி உள்ளார்.