தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்ததாக அதிக அளவில் ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். அவர் சில வருடங்களாகவே தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அவர்கள் மூலமாக பல நற்பணி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தன்னாலும் முடிந்த அளவில் பொருள் உதவி செய்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் மாணவர்களின் பக்கமும் அவரது கவனம் திரும்பி உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த 2023 ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இரண்டு லட்டு தின்னும் பாக்கியம் கிடைக்கப் போகிறது..
ஆம்.. அதாவது விஜய் மூலமாக அவர்களுக்கான கல்வி உதவித்தொகை கிடைப்பதுடன், அவர்கள் விஜய்யை நேரில் சந்திக்கும் வாய்ப்பும கிடைக்கப் போகிறது என்றால் இது கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்பது போல தானே..?

ஆனால் இது யாருக்கெல்லாம் கிடைக்கும் என்றால் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் பத்தாம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பிலும் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு அவர்களுக்கான சான்றிதழ்களும் அவர்களுக்கான உதவித்தொகையும் அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் வழங்கப்பட இருக்கிறது.

வரும் ஜூன் 17ஆம் தேதி நடிகர் விஜய்யே இதை வழங்கி இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் கடந்த 2013லும் விஜய் இதேபோன்று தானே நேரடியாக உதவித்தொகை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.