தென் மாவட்டத்தில் வயதான பெண்மணிகள் பலரையும் இப்போது பார்த்தாலும் கூட காதில் தங்கத்தால் ஆன தண்டட்டி என்கிற ஒரு அணிகலனை அணிந்திருப்பார்கள். தற்போது அந்த தண்டட்டி என்கிற பெயரிலேயே படம் ஒன்று உருவாகி உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராம் சங்கையா என்பவர் இயக்கியுள்ளார்.
சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இதில் கதையின் நாயகனாக பசுபதி நடித்துள்ளார். மேலும் ரோகிணி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றது.
இந்த விழாவில் இந்தப்படம் உருவான விதம் குறித்து இயக்குனர் ராம் சங்கையா கூறும்போது, “இந்த படத்தின் கதை எழுதியதுமே இது இரண்டு பேர் நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என நினைத்தேன்.. ஒருவர் மம்மூட்டி.. இன்னொருவர் பசுபதி.. மம்முட்டி எங்களிடம் சிக்கவில்லை.. ஆனால் இந்த படத்தின் கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே இதில் நான் நடிக்கிறேன் என சம்மதம் தெரிவித்தார் பசுபதி. நான் எதிர்பார்த்தபடியே இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார் என்று கூறினார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரோகிணி படம் முழுவதும் ஒரு பிணமாகவே நாற்காலியில் அமர வைக்கப்பட்டபடி மிகவும் சிறப்பாக்க நடித்துள்ளார். அது மட்டுமல்ல ஒரு மோசமான குடிகாரந கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் பிரசன்னா நடித்துள்ளார்.
இப்ப படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இந்த படத்தில் நடித்த தண்டட்டி அப்பத்தாக்கள் அனைவரையும் சென்னைக்கு வரவழைத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செய்து அவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளையும் கொடுத்து அனுப்பியுள்ளார் தயாரிப்பாளர் லட்சுமணன் குமார்.