நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முக்கால்வாசி நெருங்கி விட்டது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து இருப்பதாலும் மாஸ்டர் படத்திற்கு பிறகு விக்ரம் என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்திருப்பதாலும் இந்த படத்தின் மீது விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, பொதுவான ரசிகர்கள் அனைவருக்கும் இரு மடங்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.
வரும் அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னொரு பக்கம் யாரும் எதிர்பாராத விதமாக லியோ படம் முடிவதற்கு முன்பாகவே விஜய்யின் 68 வது படம் குறித்த அறிவிப்பும் அந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க போகிறார் என்கிற அறிவிப்பும் சேர்ந்து முன்கூட்டியே வெளியாகி உள்ளது.
கடந்த 12 வருடங்களுக்கு முன்பு அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படம் வெளியாகி வெற்றி பெற்றபோது இதே போல ஒரு மாஸான படம் வெங்கட் பிரபு – விஜய் கூட்டணியில் உருவாக வேண்டும் என ரசிகர்கள் விரும்பினர். அது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு நிறைவேறி உள்ளது.
இந்த நிலையில் விரைவில் விஜய்யின் பிறந்த நாள் வர உள்ளது. இந்த பிறந்தநாளின் போது விஜய் ரசிகர்கள் இரண்டு விஷயங்களை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். அதன்படி லியோ படம் குறித்து ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக இருக்கிறது என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோவிற்கு நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
அதேபோல வெங்கட் பிரபு விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டிலும் இதே நாளில் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் என்கிற பெயரை நினைவூட்டும் விதமாக சி எஸ் கே என்கிற டைட்டில் வைக்கப்படலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் இதற்கான விடை கிடைத்துவிடும்.