சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். சொல்லப்போனால் வெளிநாடுகளில் இந்திய சினிமாவை குறிப்பாக தமிழ் சினிமாவை அதிகம் கொண்டு சென்று சேர்த்த முதல் நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
அந்த வகையில் ஜப்பான் நாட்டில் அவருக்கென மிகப்பெரிய அளவில் ரசிகர் இருக்கின்றனர். அவரது படம் வெளியாகும் போது ஜப்பானில் திருவிழா போல கொண்டாடுவதுடன் ஜப்பானிலிருந்து சென்னைக்கு பறந்து வந்து படம் பார்த்துவிட்டு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.
அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாடல்களும் வெளிநாடுகளில் பல விழாக்களில் ஒலித்துள்ளன. அந்த வகையில் தற்போது கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் சம்பள உயர்வை கேட்டு தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி திரைப்படத்திலிருந்து உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லேடா என்கிற பாடல் ஒலிக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பலர் இந்த பாடலுக்கு நடனமாடியது பார்ப்பதற்கு ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது.