கடந்த 2011ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த். அதைத்தொடர்ந்து ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை கடந்த வருடம் வெளியான கணம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2004-ல் தெலுங்கில் கௌரி என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார் ஷர்வானந்த். அதைத் தொடர்ந்து சங்கர் தாதா எம்பிபிஎஸ், வெண்ணிலா என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாகவும், இரண்டு கதாநாயகர்களில் ஒருவராகவும் மாறிமாறி தனது திரையுலக பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அவரது திருமணம் விமர்சையாக ராஜஸ்தானில் நடைபெற்றது. கடந்த ஜனவரி 26ஆம் தேதி அவருக்கும் ஆந்திராவில் ஸ்ரீகாளகஸ்தி தொகுதியில் பலமுறை சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த மறைந்த போஜல கோபாலகிருஷ்ண ரெட்டியின் பேத்தி ரக்ஷிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இன்று கோலாலமாக திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.