பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படம் கடந்த வருடத்திலேயே படபிடிப்பு முடிந்துவிட்டாலும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வந்தன. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து இரண்டு லிரிக் பாடல் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இப்போதே இந்த படத்தின் புரமோசனையும் துவங்கி விட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ். இவரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் படம் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
பொதுவாக பொழுதுபோக்கு சேனல்களில் படக்குழுவினர் பேட்டி அளிப்பது தான் வழக்கம். மாமன்னன் படத்தில் அதிலும் ஒரு புது விதமான முயற்சியாக ஐபிஎல் கிரிக்கெட் நடைபெற்று வரும் இந்த சமயத்தில் இப்படி விளையாட்டு சேனல் ஒன்றில் புரமோஷன் நிகழ்ச்சியை துவக்கி இருப்பதும் ஒரு புதிய யுக்தி தான்.