இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவின் தலையெழுத்தையே மாற்றும் விதமாக பல வெற்றி படங்களை கொடுத்தவர். இன்றும் திரையுலகுக்கு வருகை தரும் பல இயக்குனர்களுக்கு மானசீக குருவாக விளங்குபவர். டைரக்ஷனில் இருந்து ஒதுங்கி விட்டாலும் சமீப வருடங்களாக பிசியான குணசித்திர நடிகராகவும் தனது இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி வருகிறார் பாரதிராஜா.

அதேசமயம் அவருடைய மகன் மனோஜ் பாரதி தந்தை வழியிலேயே இயக்குனராக விரும்பினாலும் கூட தந்தையின் விருப்பத்திற்காக தாஜ்மஹால் என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அவருக்கு அதில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை.

அதே சமயம் அடுத்து வந்த நாட்களில் ஒரு நல்ல குணச்சித்திர நடிகராகவும் மாறினார் மனோஜ் பாரதி. இந்த நிலையில் தனது நீண்ட நாள் கனவான டைரக்ஷனில் களம் இறங்கி மார்கழி திங்கள் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கு முன்பாக எப்படி இயக்குனர் பாரதிராஜாவை தான் இயக்கிய பாண்டிய நாடு திரைப்படத்தின் மூலம் இயக்குனர் சுசீந்திரன் குணச்சித்திர நடிகராக திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினாரோ, அதேபோல தனது வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரிப்பதன் மூலம் மனோஜ் பாரதியை இயக்குனராகவும் அறிமுகப்படுத்துகிறார்.

ஷ்யாம் செல்வன் ரக்சனா அறிமுக ஜோடியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனியில் இன்று முதல் துவங்கி உள்ளது. எளிய கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை அதேசமயம் தனது தந்தையின் படங்களில் இடம்பெறும் சாதியை பின்னணியையும் கொண்டு இதன் கதையை உருவாக்கி உள்ளாராம் மனோஜ் கே.பாரதி