தமிழ் திரையுலகில் தேனிசைத்தென்றல் என அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஹிட் பாடல்களை கொடுத்தவர். அவரது குடும்பத்தில் இருந்து அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான டபுள்ஸ் என்கிற படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக விஜய்யின் சிவகாசி பட பாடல் எப்போதும் அவரது ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக இருக்கிறது. அந்த வகையில் திரையுலகில் கிட்டத்தட்ட 20 வருடங்களை கடந்துள்ள ஸ்ரீகாந்த் தேவா தனது நூறாவது படம் என்கிற மைல் கல்லை தொட்டுள்ளார்.
விரைவில் வெளியாக இருக்கும் பிரியமுடன் பிரியா என்கிற படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். இந்த படம் இவரது நூறாவது படமாக வெளியாக உள்ளது இந்த படத்தில் கதாநாயகனாக முருகா அசோக் நடிக்க, நாயகியாக லிசா நடித்துள்ளார். சுஜித் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீகாந்த் தேவா பேசும்போது, இசை குடும்பம் என்றாலும் எனக்கு சிறுவயதில் இசையில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. படிப்பிலிருந்து தப்பிப்பதற்காக இசையை கற்றுக் கொள்கிறேன் என கூறி அப்படியே இசையமைப்பாளராக உருவானவன் நான்.. இந்த உயரத்தை தொட காரணமாக அமைந்த அனைவருக்கும் எனது நன்றிகள் என்று கூறினார்.