மனதில் பட்டவற்றை துணிச்சலாக பேசுவது மட்டுமல்ல, அவற்றை தான் இயக்கும், நடிக்கும் படங்களிலும் கூட ரசிகர்களுக்கு உரக்கச் சொல்லி வருபவர் நடிகர் சமுத்திரக்கனி.
சமுத்திரக்கனி இயக்குனராக இருந்தாலும் அவரது நடிப்புக்கு என ஒரு மார்க்கெட் உருவாகி விட்டதால் டைரக்ஷன் பணிகளை குறைத்துக்கொண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான குணச்சித்திர நடிகராக மற்றும் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வருடம் வினோதய சித்தம் என்கிற படத்தை அவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கதையின் நாயகனாக தம்பி ராமையா நடித்திருந்தார். தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானாலும் கூட இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டை பெற்றது.
அதே சமயம் இந்த படம் தெலுங்கு முன்னனி நடிகர் பவன் கல்யாணுக்கு ரொம்பவே பிடித்துப்போக, தற்போது இதை தெலுங்கில் ரீமேக் செய்து நடித்து வருகிறார். தெலுங்கிலும் இந்த படத்தை சமுத்திரக்கனியே தான் இயக்கி வருகிறார்.
இந்த படம் வரும் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை டைட்டில் வைக்கப்படாமலேயே படப்பிடிப்பு மற்றும் புரொடக்சன் பணிகளில் இருந்த இந்த படத்திற்கு தற்போது ப்ரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.