சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா 3, வை ராஜா வை ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது லால் சலாம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ரம் விக்ராந்த் இருவரும் நடிக்கின்றனர்.
தவிர மொய்தீன் பாய் என்கிற முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வருகிறது.
இதன் படப்பிடிப்பு ஏறக்குறைய பாதிக்கு மேல் முடிவடைந்து விட்ட நிலையில் கடந்த சில நாட்களாக மும்பையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இந்த படத்தில் விசேஷ தோற்றத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முதன்முதலாக இந்தியாவிற்கு உலக கோப்பையை வென்று கொடுத்த கிரிக்கெட் வீரருமான கபில்தேவ் நடிக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியும் இவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளன.
கபில்தேவுடன் நடித்த அனுபவம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறிப்பிடும் போது, ‘தொடர்ந்து இந்தியாவை, முதன்முறையாக உலக கோப்பையில் வென்று பெருமைப்படுத்திய மிகவும் மரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதர் கபில்தேவ்ஜீ யுடன் இணைந்து பணியாற்றுவது எனது பெருமையும் பாக்கியமும் ஆகும்” என கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.