தமிழ் சினிமாவில் எப்போதாவது உணர்வுபூர்வமான படங்கள் வெளியானது உண்டு. அதிலும் குறிப்பாக மனிதநேயம் பற்றி பேசும் படங்கள் என்று கணக்கிட்டால் அது கூட வெகு சில படங்களே. அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் மனிதநேயம் பற்றி பேசி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற திரைப்படம் வரும் மே 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் சமீபத்தில் பத்திரிகையாளர் காட்சியாகவும் சீமான் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் பார்க்கும் விதமாகவும் திரையிடப்பட்டது.
பத்திரிக்கையாளர்களிடம் மிகப்பெரிய பாராட்டை பெற்ற இந்த படம் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களிடமும் மிகப்பெரிய பாராட்டை வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் இலங்கை தமிழ் அகதிகளின் வலியை அழுத்தமாக பதிவு செய்துள்ளது. இதில் இலங்கைத் தமிழராக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இந்த படத்தை பார்த்து விட்டு சீமான் கூறும்போது முதல் முறையாக இலங்கை தமிழ் அகதிகளின் தமிழக வாழ்க்கையை அவர்களது வலியை மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். அதுமட்டுமல்ல ஏதாவது அரசியல் பிரச்சனைகள் வருமா என்றெல்லாம் நினைக்காமல் இந்த இலங்கை தமிழர் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இந்த பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வு என்ன என்பதையும் இந்த படத்தின் மூலமாக சொல்ல ஒப்புக்கொண்ட விஜய் சேதுபதியின் நல்ல மனதுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.