கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்த கொன்றால் பாவம் என்கிற திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அந்த படத்தை தயாள் பத்மநாபன் என்கிற கன்னட திரைப்பட இயக்குனர் இயக்கியிருந்தார்.
அந்தப் படத்தின் கதையும் அவரது டைரக்சனும் பிடித்து விட்டதாலோ என்னவோ அதில் நடித்த வரலட்சுமியும் சந்தோஷ் பிரதாப்பும் அடுத்ததாக அவர் இயக்கியுள்ள மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் என்கிற படத்திலும் நடிக்க உடனடியாக ஒப்புக் கொண்டனர்.
அந்த படமும் படப்பிடிப்பு முடிவடைந்து ஆகா தமிழ் ஒரிஜினலில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் பிக்பாஸ் புகழ் ஆரவ் கதாநாயகனாக நடித்துள்ளார். விரைவில் ஆகா தமிழ் ஒரிஜினலில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு தற்போது நடைபெற்றது.
சமீபத்தில் வெளியாகும் சில படங்கள் ஏதோ ஒரு வித சர்ச்சையை எழுப்பி வருகின்றன. ஆனால் எங்களது படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை என முன்கூட்டியே ஜாலியாக ஒரு விளக்கத்தை கொடுத்து விட்டார் இந்த படத்தின் நாயகி வரலட்சுமி சரத்குமார்.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, ‘இயக்குநர் தயாள் அவர்கள் ‘கொன்றால் பாவம்’ படத்தில் மூலம் தான் எத்தகைய இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார். ஒரு சிறிய படமாக இருந்தாலும் அதில் கதை என்பது இருக்கும். இந்தப் படத்திலும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படியான கதை இருக்கும். ஏன் இந்தப் படத்தை பார்க்கிறோம் என்று ஒரு இடத்தில் கூட நீங்கள் நினைக்க மாட்டீர்கள். த்ரில்லர் கதையான இதை எப்படி திரைக்கதையாக உருவாக்கி படமாக எடுக்கப் போகிறார்கள் என்ற ஆச்சரியம்தான் எங்களுக்கு இருந்தது. ஆனால், அதையெல்லாம் மிகச் சரியாக எடுத்து இருக்கிறார்கள்.
எங்கள் படத்தில் பெரிதாக சர்ச்சை என்பது இல்லை. இப்பொழுது எல்லாம் படத்தில் ஏதாவது ஒரு சர்ச்சை வைத்து விடுகிறார்கள். ஆனால், எங்கள் படத்தில் கதை மட்டும் தான் உள்ளது “ என்று கூறினார்