பிக்பாஸ் முதல் சீசன் மூலமாக டைட்டில் வின்னர் ஆக தமிழக ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகர் ஆரவ். அதைத்தொடர்ந்து இயக்குனர் சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் என்கிற படத்தில் நடித்தாலும் அவருக்கு அந்த படம் உதவி செய்யவில்லை.

ஆனால் கடந்த வருடம் உதயநிதி நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான கலகத்தலைவன் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றார். இந்த நிலையில் தற்போது மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் என்கிற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் வரலட்சுமி கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். கொன்றால் பாவம் திரைப்படத்தை இயக்கிய தயாள் பத்மநாபன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ஆரவ் சமீபத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “கலக தலைவன்’ படத்தில் வில்லனாக நடித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் இந்த வாய்ப்பு சர்ப்ரைஸ் பேக்கேஜ் ஆக வந்தது. தயாள் சார் என்னிடம் கதை சொன்னதும், ‘எப்பொழுது ஷூட்டிங்?’ என்று கேட்டேன். ‘அடுத்த வாரம்’ என்றார்.

தமிழ் சினிமாவில் பொதுவாக கதை சொல்லி படப்பிடிப்பு ஆரம்பிக்க இரண்டு மாதங்கள் ஆவது ஆகும். ஆனால், இவர் சொன்னது போலவே அடுத்த வாரத்தில் படப்பிடிப்புக்கு சென்று விட்டார். 25 நாட்களில் படப்பிடிப்பு முடித்து விடுவோம் என்று சொல்லி 21 நாட்களிலேயே முடித்திருக்கிறார். டப்பிங்கில் பார்க்கும்பொழுது படம் மிகவும் நன்றாக வந்துள்ளது” என்று கூறினார்