நடிகர் அருள்நிதியை பொருத்தவரை தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவரது படங்களுக்கு என ஒரு ரசிகர் கூட்டம் தனியாகவே உள்ளது. அதேபோல அவர் இப்படி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதால் அவருக்காக கதை எழுதும் படைப்பாளிகளும் அதிகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி என்கிற ஹிட் படத்தை கொடுத்து முதல் படத்திலேயே அதிரடி காட்டிய இயக்குனர் கௌதம் ராஜ் தற்போது அடுத்ததாக இயக்க உள்ள கழுவேத்தி மூர்க்கன் என்கிற படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்து வந்தார்

இந்த படத்தில் கதாநாயகியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் நடிக்கிறார். இந்த படத்தில் மேலும் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஸ்காந்த், சரத் லோகிதாஸ்வா, ராஜசிம்மன், யார் கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு டி. இமான் இசை அமைக்கிறார். தற்போது இந்த படம் மே 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது மட்டும்ல்ல இந்த படத்தில் இருந்து அவ கண்ண பார்த்தா என்கிற பாடல் மே 15ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

பெரும்பாலும் அருள்நிதி நகரத்து கதைக்களங்கள் கொண்ட படங்களில் தான் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் அவர் நடித்த வம்சம் திரைப்படம் மட்டும் கிராமத்து பின்னணியில் உருவாகி இருந்தது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் கிராமத்து பின்னணி கொண்ட ஒரு கதை களத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.