கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் முதன்முறையாக தெலுங்கு இயக்குனரின் டைரக்ஷனில் தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்ஷனில் தெலுங்கில் சார் என்றும் தமிழில் வாத்தி என்றும் இந்த படம் வெளியானது.

இந்த படம் இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்றாலும் தமிழை விட தெலுங்கில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் வசூலும் கிடைத்தது. இந்த நிலையில் தனுஷ் படத்தை தொடர்ந்து அடுத்ததாக துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி.

தெலுங்கு திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தற்போது வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே மகாநடி என்கிற படத்தின் மூலமாக தெலுங்கில் அடியெடுத்து வைத்து வரவேற்பு பெற்ற நடிகர் துல்கர் சல்மான் அடுத்ததாக சீதாராமம் என்கிற படத்தில் நடித்தபோது தெலுங்கில் உள்ள இளம் நடிகர்களுக்கு இணையான வரவேற்பு பெற்றார். இந்த நிலையில் தற்போது இந்த புதிய கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு இப்போது இருந்தே எதிர்பார்ப்பு துவங்கியுள்ளது.

















