பெரும்பாலும் இங்கே இஸ்லாம் சமூகத்தை மையப்படுத்தி ஏதாவது படங்கள் வெளிவரும்போது அந்த படத்தில் என்ன கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பது தெரியாமலேயே அரசல் புரசலாக கேள்விப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு அந்த படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் போக்கு இப்போதும் தொடர்கிறது.
அப்படித்தான் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் ஃபர்ஹானா திரைப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்தன.
இதற்கு முன்னதாக கேரள ஸ்டோரி என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. அதனால் ஃபர்ஹானா படமும் அப்படித்தான் இருக்குமோ என்கிற கோணத்தில் இந்த எதிர்ப்பு எழுந்தது.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தின் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் வீடு முன்பாக சில இஸ்லாமிய அமைப்புகள் நேரில் வந்து போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தற்போது இந்த படத்தை பார்க்க இயக்குனர் அமீர், இந்த படம் முஸ்லீம் மக்களுக்கு எதிரான படம் அல்ல.. அதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செல்வி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள “ஃபர்ஹானா” திரைப்படம் குறித்து ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களும் அத்திரைப்படத்தை எதிர்ப்பது போல் ஒரு தோற்றம் உருவாகி உள்ளது. மேலும் இஸ்லாமிய மக்களால் ஐஸ்வர்யா ராஜேஷ் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ.? என்கிற நோக்கில் அவரது இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் செய்தி உண்மையிலேயே எனக்கு வருத்தம் தருவதாக இருக்கிறது.
இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தி மத வேற்றுமையை உருவாக்கும் ஒரே நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தையும், “ஃபர்ஹானா” திரைப்படத்தையும் ஒரே கோணத்தில் பார்க்கும் அளவிற்கு தமிழர்களும் இஸ்லாமியர்களும் அறிவில் குறைந்தவர்கள் இல்லை.
இஸ்லாமியர்களை பற்றி இயக்குனரும், தயாரிப்பு நிறுவனமும் அவர்கள் அறிந்து வைத்திருக்கும் விதத்திலேயே ஃபர்ஹானா திரைப்படத்தை எடுத்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும் என்பதாலும், அவருக்கு இஸ்லாமியர்கள் மீது அன்பும், மரியாதையும் இருப்பதை நான் உணர்ந்திருப்பதாலும், இஸ்லாமிய கோட்பாடுகளை இழிவுபடுத்தும் உள்நோக்கோடு இத்திரைப்படத்தில் நடித்திருப்பார் என்பதையும், தீய நோக்கத்தோடு இத் திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் எடுத்திருக்கும் என்பதையும் நான் நம்பவில்லை.
எனவே இஸ்லாமிய கதாபாத்திரங்கள் உள்ள எல்லா திரைப்படத்துக்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி, இஸ்லாமிய சமூகத்தை ஒரு சகிப்பின்மை கொண்ட சமூகமாக சித்தரிக்க வேண்டாம் என்று இந்த அறிக்கையின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு மதவேற்றுமையை கடந்து ஒரு அமைதிப் பூங்காவாகவே எப்போதும் திகழ்கிறது. இனியும் அப்படியே தொடரும் என்ற நம்பிக்கையோடு ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் காவல்துறையின் பாதுகாப்பை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்